கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் வழிபடும் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைப்பெறும்.
அப்போது மூன்றாம் பாலினத்தவர்கள் கோயில் பூசாரிகளின் மூலம் தாலி கட்டிக் கொண்டு அன்று இரவு முழுவதும் இறைவனை நினைத்து சந்தோஷமாக ஆடி, பாடி மகிழ்ந்து காலையில் தாலியை அறுத்து விதவைகள் கோலத்தோடு தங்களது பகுதிகளுக்குத் திரும்பிச் செல்வர்.
இத்திருவிழாவில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களும் வருகை தந்து, விழாவில் சிறப்பிப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக, கடந்தாண்டும், இந்தாண்டும் அரசு விழாவுக்குத் தடை விதித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் கூவாகம் கோயிலுக்குச் சென்று கூத்தாண்டவர் என அழைக்கப்படும் அரவானுக்கு வழிபாடு நடத்தினர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மூன்றாம் பாலினத்தவர்கள் கூறியதாவது, "எங்களை போன்ற மூன்றாம் பாலினத்தவர்கள்(திருநங்கைகள்) அனைவரும் ஒன்று கூடி தங்களின் சுக-துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இத்திருவிழா உள்ளது.
ஆனால், கரோனா தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகள் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு நெருக்கமான நட்புகளைச் சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.
இந்தத் தடை காலத்தில் எவ்வித அடையாள அட்டையும் இன்றி புறக்கணிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அரசு ஏதேனும் அடையாள அட்டை வழங்கி நிவாரணம் வழங்க வேண்டும்" என்றனர்.