கள்ளக்குறிச்சி: அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌரி-லோகநாதன் தம்பதி. கடந்த 7ஆம் தேதி இவர்களது 4 வயது மகன் வழக்கம்போல் வீட்டில் தாய், தந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு கௌரி எழுந்து பார்த்தபோது சிறுவன் காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கச்சிராயபாளையம் காவல் துறையினர் சிறுவனின் வீட்டின் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வீடுகளிலும், அருகிலுள்ள நீர்நிலைகளான விவசாயக்கிணறுகள் மற்றும் கோமுகி ஆற்றின் கரைப்பகுதிகளிலும் குப்பைக்கூடங்களிலும் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கச்சிராபாளையம் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுவனைப் பற்றிய முழுமையான துப்பு கிடைக்காததால் உயர் அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வகுமாரின் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, திருமேனி ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து கச்சிராயபாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமும் கோமுகி ஆறு உள்ளிட்ட நீர்நிலைப்பகுதிகளிலும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் செல்போன் எண்களை வைத்து அவற்றுள் பகிரப்படும் தகவல்களையும் தீவிரமாக கண்காணித்து சிறுவனைத்தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பங்காரம் என்ற பகுதியில் இருந்து ஒரு தொலைபேசியில் இருந்து தாயாருக்கு அழைப்பு வந்தது.
அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், “உங்கள் மகன் எங்களிடம் தான் உள்ளான். ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் சிறுவனை உயிருடன் உங்களிடம் ஒப்படைக்கிறோம்” எனத் தெரிவித்தனர். பெற்றோருக்குத் தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து கண்காணித்தனர்.
அப்போது, பொலிரோ காரில் இரண்டு பேர் அந்த சிறுவனை அமர வைத்துக்கொண்டிருந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்த காவல் துறையினர், சிறுவனை பத்திரமாக மீட்டனர். மேலும், சிறுவனை கடத்தியது உறவினரான சுந்தர சோழன் மற்றும் ஈஸ்டர்ராஜ் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான அருள் என்பவன் குறித்த விவரங்களை சேகரித்து உடனடியாக அருளையும் கள்ளக்குறிச்சி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ரகுபதி என்பவரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: போர்க்களமாக மாறிய போராட்டம்... பள்ளியை சூறையாடிய மாணவர் அமைப்பினர்!