கள்ளக்குறிச்சி மாவட்டம், சேலம் – கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பில் சாலையின் நடுவே பூச்செடிகள் அமைக்கபட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திலி அய்யனார் கோயில் அருகே சாலையின் நடுவே உள்ள பூச்செடிக்கு டேங்கர் லாரி மூலம் சுங்கச்சாவடி ஊழியர்கள் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி எம் சேண்ட் ஏற்றி வந்த மணல் லாரி, டேங்கர் லாரியின் பின் புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில், மணல் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் படுகாயமடைந்து கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த சுங்கச்சாவடி ஊழியர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாலையின் நடுவே விபத்துக்குள்ளான லாரியை மீட்க பல மணி நேரமாகப் போராடி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக சின்ன சேலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓட்டுநர் தூங்கியதால் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதல்!