கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி சந்தேகத்திற்குரிய முறையில் கடந்த ஜூலை 13அன்று மரணம் அடைந்தார். இதுதொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று பள்ளியில் மாணவி விழுந்து உயிரிழந்த இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சிபிசிஐடி குழுவினர் ஜியா உல்ஹக் தலைமையில் ஆய்வு செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வந்த சிபிசிஐடி குழுவினர், சுமார் மூன்று மணி நேரம் பள்ளி வளாகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது மாணவி தங்கியிருந்த விடுதியின் அறைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பகுதி, அவர் விழுந்ததாக கூறப்படக்கூடிய இடங்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவியைப்போல் உருவ பொம்மையை தயார் செய்து, அதை மாடியில் இருந்து குதிக்க வைத்து பரிசோதனை செய்தனர்.
மேலும் மாணவி இறந்த இடத்தின் தன்மை, விழுந்த இடம், இடைப்பட்ட தூரம் உள்ளிட்டவைகளையும் ஆய்வு மேற்கொண்டு பதிவு செய்தனர். அதேநேரம் மாணவி ஸ்ரீமதியின் உடலை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பிரேத பரிசோதனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அதிரடி மாற்றம்!