கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் வெளியே வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அந்த மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு உடனடியாக தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் தினசரி பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருள்களை வாரத்திற்கு ஒருமுறை வாங்குவது மிகவும் நல்லது. தேசிய ஊரடங்கு உத்தரவு மீறியதாக மாவட்டத்தில் பல நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்கள், மருத்துவமனைகளுக்குச் செல்லும் நபர்கள், வேலை செய்யும் இடத்திற்குச் செல்லும் நபர்கள், மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நபர்கள், பிரசவ தாய்மார்கள் ஆகியோர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது.
பத்திரிகையாளர்கள் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், தொழிலாளர்களும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.