கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்பு வார்டில் பிரசவ வார்டு, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை இயங்கி வருகின்றன. தற்போது 144 தடை உத்தரவு அமலலில் உள்ளதால் சங்கராபுரம், ரிஷிவந்தியம், எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், சின்னசேலம், கச்சராயபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பிரசவம், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இங்குள்ள கரோனா வார்டு இணைப்பு கட்டடத்தின் ஒரு பகுதியில் பிரசவ வார்டு அமைக்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கர்ப்பிணிகள், பிரசவமான பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டு மற்ற தாய்மார்கள் சிகிச்சைப் பெற்றுவரும் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று (ஏப்ரல் 25) இரவு திடீரென பிரசவம் பார்க்கப்பட்ட பெண்ணை அந்த வார்டில் இருந்து அவசர அவசரமாக கரோனா சிகிச்சை சிறப்பு வார்டுக்கு மருத்துவர்கள் மாற்றினர்.
வார்டில் இருந்த பிரசவ தாய்மார்கள் அனைவரையும் வெளியேற்றி அமர வைத்தனர். மேலும், அந்தப் பெண்ணுக்கு கரோனா உள்ளதாக பரபரப்பாக தகவல் பரவியது. இதனால், பிரசவ தாய்மார்கள், நோயாளிகளின் உறவினர்கள் அனைவரும் வார்டில் இருந்து வெளியேறினர். மேலும், அந்தப் பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் நமக்கும் கரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், " பிரசவ வார்டு கட்டடத்தில் எப்படி கரோனா சிறப்பு வார்டு இருக்கலாம். இது மருத்துவர்களுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கரோனா சிறப்பு வார்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்து மாற்றி தனி இடத்தில் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:கரோனா பாதித்தவர்களை ஒதுக்காமல் இயல்பாக நடத்துங்கள்!