தீபாவளி பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வாரந்தோறும் நடக்கும் இந்த ஆட்டுச்சந்தையில், கள்ளக்குறிச்சி, விருதாச்சலம், திருவெண்ணை நல்லூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு ஆட்டின் விலை 7ஆயிரம் ரூபாய் முதல் 12ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. காலை 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை ஆட்டுச்சந்தை நடந்து முடிந்தது. சுமார் 4ஆயிரம் ஆடுகள் மூன்று மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளன. நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் இந்த சந்தையில் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
வழக்கமாக 5ஆயிரம் ரூபாய் முதல் முதல் 7ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த இன்றைய சந்தையில் 7ஆயிரம் முதல் 12ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய ஆட்டுச்சந்தையில் கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, சேலம், புதுச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருகை தந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!