கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த அரசு. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னை ஆன்லைன் மூலமாக சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு, முதலில் சில முறை ஜெயித்ததாகவும், பின்னர் அதனை தொடர்ந்து போது பல லட்சம் ரூபாய் வரை இழந்துவிட்டதாகவும், ஒரு கும்பல் இந்த மோசடி செயலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது. புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் பிரிவு எஸ்பி சிபிசக்கரவர்த்தி தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட நபர்கள் பணம் செலுத்திய வங்கி கணக்கை வைத்து நடத்திய விசாரணையில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு இடைத்தரகராக செயல்பட்ட பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த சசிகுமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், முகமது ஆசிப், முக்கிய நபரான அம்பத்தூரைச் சேர்ந்த சாய் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![ஆன்லைன் சூதாட்டம் மோசடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-onlinegamearrest-script-7202290_16122021222106_1612f_1639673466_69.jpg)
சூதாட்ட மோசடி
சட்டவிரோதமாக பல ஆன்லைன் சூதாட்ட செயலிகள் இருப்பதாகவும், பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தையை நம்பி பொதுமக்கள் பலர் செயலியை பதிவிறக்கம் செய்வதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சூதாட்ட செயலியின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருப்பதாலும், சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் பணத்தை பல நாடுகளிலிருந்து அனுப்ப ஏதுவாக அந்தந்த மாநிலங்களில் 10 இடைத்தரகர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
![ஆன்லைன் சூதாட்டம் மோசடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13928479_1094_13928479_1639705123169.png)
இந்த இடைத்தரகர்கள் தங்களது வங்கிக் கணக்கை அந்த செயலி மூலம் இணைத்து வைத்திருக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை அனுப்பியவுடன் அதை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி, வெளிநாட்டிலுள்ள உரிமையாளர்களுக்கு அனுப்ப வேண்டும். இப்படி செய்தால் இடைத்தரகருக்கு 10 விழுக்காடு கமிஷன் வழங்கப்படும்.
இதே போல் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடக்கூடிய நபர்களின் பணத்தை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி அனுப்பும் இடைத்தரகர் பணியில் கைது செய்யப்பட்ட 5 நபர்களும் செயல்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக முதலில் இரண்டு ஆட்டங்களில் ஜெயிக்க வைப்பதுபோல் ஆசை காட்டி, பிறகு பணத்தை இழக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிறை
100 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை பொதுமக்கள் பலரும் சூதாட்டத்தில் செலுத்தி இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் இணைந்து தமிழ்நாட்டில் கடந்த ஓரு வருடத்தில் மட்டும் 10 கோடி ரூபாய் வரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 2 லேப்டாப், 1 கணினி, 10 செல்போன்கள், 27 ஏடிஎம் கார்டு, 4 பென் டிரைவ், 1 மெமரி கார்டு, 340 சிம்கார்டுகள், 1.20 லட்சம் ரூபாய் பணம், 1 சொகுசு கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் மீது மோசடி உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட நபர்கள் 155260 என்ற சைபர் கிரைம் உதவி மைய எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார்கள் அளிக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த சட்டவிரோத சூதாட்ட செயலியை முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைதான 5 பேரையும் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தலைமையகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவர்கள் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது