கள்ளக்குறிச்சி: தனியார் மண்டபத்தில் அதிமுக ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், கழக வேட்பாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் ஒருசில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களின் கோபத்துக்குள்ளாகி உள்ளது.
தோல்வி பயத்தில் திமுக
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்குத் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தால் அதிமுகவின் வெற்றியை அவர்கள் (திமுகவினர்) தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தோல்வி பயத்தால் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை திமுகவினர் திட்டமிட்டு நிராகரித்துள்ளனர். இதற்குத் துணைபோன அலுவலர்கள் சட்டரீதியாக நீதிமன்றம் செல்ல நேரிடும்” என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் குமரகுரு, தேர்தல் பொறுப்பாளர் எம்.சி. சம்பத், விஜயபாஸ்கர், மோகன், செல்லூர் ராஜு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிடும் பெண்ணுக்கு ஆதரவாக ஊரே களமிறங்கிய விநோதம்