தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையானது வேகமெடுத்த நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது கரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சுப காரியங்கள், திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மணமகள் என்னும் தொற்று:
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேவுள்ள கனியாமூர் என்னும் பகுதியில் திருமணத்திற்காக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், 'இன்ஜினியருக்கு கரோனா தொற்று உறுதி' என வித்தியாசமாக எழுதப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மணமகன் போராடவேண்டியது கரோனாவுடன் இல்லை; அவரது மனைவியுடன் என மணமகனை கேலி செய்யும் வகையில் நையாண்டியாக எழுதப்பட்டுள்ளது.
கரோனாவுடன் தொடர்புடைய அடைமொழிப்பெயர்கள்:
இவைகளுக்கெல்லாம் ஹைலைட் என்னவென்றால், மணமகனின் நண்பர்கள், தங்களது புகைப்படத்துடன் தங்களுக்கான புது அடைமொழியையும் வைத்துள்ளனர். அது லைம்லைட்டில் இருக்கும் கரோனாவுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
நிலவேம்பு சிவாவும் கோவிட் குமாரும்:
'மாட்டு ரவி, பூனை மணி, சாரப்பாம்பு' என படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி கதாபாத்திரங்களின் பெயர்கள்போல, 'நிலவேம்பு சிவா, கோவிட் குமார், வைரஸ் வசந்த், சானிடைசர் ஸ்ரீராம்' என கரோனா காலத்தில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை 'இந்த கொலைவெறி கொரோனா பாய்ஸ்' தங்களுக்கு அடைமொழியாக வைத்துள்ளனர்.
ஜூன்14ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில்தான், இவ்வாறு வித்தியாசமான முறையில் பேனர் அடிக்கப்பட்டுள்ளது. இந்த பேனரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி மக்களை சிரிப்படைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு விதிமீறல்: கறி விருந்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!