கள்ளக்குறிச்சி: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, சூளாங்குறிச்சி பகுதியில் உள்ள மணிமுக்தா அணையானது தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, இன்று (டிச.12) அதிகாலை 11,000 கன அடி நீர் திடீரென திறந்து விடப்பட்டது.
இதனையடுத்து மணிமுக்தா ஆற்றுப்பகுதியின் இரு கரைகளையும் வெள்ள நீர் சூழ்ந்து ஓடுவதால், கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை ஓரம் அதிகப்படியான நீர் செல்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே தியாகதுருகம் அடுத்த வடபூண்டியை சேர்ந்த பரத் (20) என்ற கல்லூரி மாணவர், மணிமுக்தா ஆற்றுப்பகுதியில் சிக்கிக் கொண்டார். பின்னர் ஆற்றுப்பகுதியில் சிக்கிக்கொண்ட கல்லூரி மாணவரை விரைந்து மீட்குமாறு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாணவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறப்பு!