கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா மக்கள் அதிகம் கூடும் இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தனியார் வணிக வாளாகங்கள், மால்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் கரோனா வைரஸ் குறித்தான விழிப்புணர்வுகளை வழங்கினார். மேலும், பணியாளர்கள் மாஸ்க், கை உரைகள் அணிந்து இருக்கும்படி அறிவுரைகளையும் வழங்கினார்.
அதனையடுத்து பேருந்து நிலையத்திற்குச் சென்ற ஆட்சியர், அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள் பிடிக்கும் கம்பிகளை தினமும் கிருமி நாசினி, டெட்டால் போன்ற மருந்துகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் நகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர்களைத் தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், காவல் ஆய்வாளர் விஜயகுமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பக்தர்களுக்குத் தடை