கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று (ஜூன்.10) அதிகாலை, வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஜெயலட்சுமி என்பவர், பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருடன் அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோரும் உடன் சென்ற நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஆலத்தூர் ஏரி, அரிபெருமானூர் ஏரிக்கரை அருகே, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியிலும், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் சம்பவ இடத்திலேயும் உயிரிழந்தனர்.
இந்தத் துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும், அவருடன் உயிரிழந்த அவரது மாமியார் செல்வி, நாத்தனார் திருமதி அம்பிகா ஆகியோர் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, விபத்தில் உயிரிழந்த இம்மூவருக்கும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேர வேண்டிய பணப் பயன்களைப் பெற்று வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.