கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தும், ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பொக்லைன் மூலம் மீட்பு
புறவழிச்சாலையோர எட்டு அடி ஆழ பள்ளத்தில் அரசுப் பேருந்தின் அடியில் சிக்கிய கார் நொறுங்கியதால் உயிரிழந்தவர்களை மீட்பதற்கு காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டுவந்தனர்.
மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பேருந்தின் அடியில் சிக்கிய காரை மீட்ட பின்னர், உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை மீட்டனர்.
சிகிச்சையில் 35 பேர்
பின்னர், அவர்களின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர், நடத்துநர் உள்பட 35 பேர் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தியாகதுருகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.