கள்ளக்குறிச்சி மாவட்டம் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் பழனிச்சாமி - ராஜலட்சுமி. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி இவர்களது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து ராஜலக்ஷ்மி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அந்நபர் நாகப்பட்டினம் மாவட்டம் பகுதாயம் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பதும், ராஜலட்சுமி வீட்டில் நகையைத் திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்து உருக்கிய நிலையில் இருந்த தங்க நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனர். அந்த இளைஞர் மீது ஏற்கனவே நாகூர், தஞ்சாவூர், மதுரை, விருதாச்சலம், நாகப்பட்டினம், திருப்பூர், பல்லடம் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக நன்னிலத்தில் ரயில்வே ஊழியர் அடித்துக் கொலை!