கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ. இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்துவந்தார். கரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டுவருகிறது. நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவரும் பள்ளியில் படித்துவருகின்றனர்.
இதனால், அவரது தந்தை ஆறுமுகம் மூன்று மகள்களின் ஆன்லைன் வகுப்பிற்காக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக, ஒரு ஸ்மார்ட்போனை வைத்து மூன்று பேரும் படித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதால், மூவரில் ஒருவர்தான் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடிந்தது.
ஒருவர் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது மற்ற இருவர் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த நித்யஸ்ரீ நேற்று முன்தினம் (செப்.1) வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆத்தூரைச் சேர்ந்த ராமு என்ற இளைஞர் நித்யஸ்ரீயை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த நித்யஸ்ரீ சடலம் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இதனையறிந்து மயான கொட்டகைக்கு வந்த ராமு, நித்யஸ்ரீ எரிந்துகொண்டிருந்த நிலையில், அதே தீயில் குதித்து எரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே காலையில் சென்ற ராமு மாலை வீடு திரும்பாததால், திருநாவலூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகாரளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து மயானத்தில் எரிந்த எலும்புகளைச் சோதனையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்