கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த தாசரபுரம் பகுதியில் வசிப்பவர் முருகதாஸ். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மகளான திலகா அருகிலுள்ள டேனிஷ் மிஷன் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து 4 இலட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 இலட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முருகதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில், இன்று ஆங்கில தேர்விற்குத் தந்தையின் இழப்பையும் பொருட்படுத்தாமல் அவரை கட்டி அணைத்தபடி அழுதுவிட்டு வேறுவழியின்றி கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து வழக்கம் போல் பள்ளிக்கு நேரில் சென்று ஆங்கிலத் தேர்வினை எழுதி உள்ளார்.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு எழுத விரும்பாத 75,000 மாணவர்கள் - தலைமை ஆசிரியர்களுக்குப் பறந்த உத்தரவு!
மாணவி திலகாவுக்கு உறவினர்கள் தேர்வினை நன்றாக எழுத வேண்டும் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உடன் பயிலும் மாணவிகள் ஆறுதல் கூறி தேர்வு எழுத ஊக்கம் அளித்து உள்ளனர்.
மாணவி திலகா தந்தை பாசத்திற்கு இடையிலும் திடமாக எடுத்த முடிவு அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது. இறப்பில் அவரைப் பிரிந்து அழுது புலம்பி மாணவி தேர்வுக்குச் சென்ற காட்சி காண்போரைக் கண் கலங்க வைத்தது.
இதையும் படிங்க: 10-ஆம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாளில் பிழை.. போனஸ் மார்க் கிடைக்குமா?