கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன் மலை உள்ளது. இந்த மலைப் பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
தேடுதல் வேட்டை
அதன்படி, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன் உத்தரவின்பேரில் கரியாலூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் துரை, தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் அடங்கிய காவல் துறையினர் கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மேல்முருவம் ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காகப் பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் பதப்படுத்திவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சாராய ஊறல்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், அவற்றைக் கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் ராஜேந்திரன் என்பவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: இணையதள விளம்பரம் மூலம் லட்சக்கணக்கில் மோசடி: ஒருவர் கைது