கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அந்தப் பகுதியில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களின் காதலுக்கு சுகன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சுகன்யாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்கவும் முடிவு செய்தனர். இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், சுகன்யா கடத்தப்பட்டதாகக் கூறி அவரது பெற்றோர் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சுகன்யாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினர். ஆனால், இளங்கோவன் ஒப்படைக்கவில்லை. எனவே, சுகன்யாவின் பெற்றோர், உறவினர்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கிளியூர் கிராமத்திற்குச் சென்றனர்.
அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த இரு கிராமங்களிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சுகன்யாவை உரிய முறையில் தங்களிடம் ஒப்படைக்கவில்லை எனக்கூறி அவரது உறவினர்களும், பெற்றோரும், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சுகன்யாவின் உறவினர்கள் காவல் துறையினர் மீது கல்வீசி தாக்கினர்.
இதில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் விஜி, உதவி ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன், வினோத் குமார் உள்பட 4 காவல் துறையினர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருநாவலூர் காவல் துறையினர் சுகன்யாவின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து இளங்கோவனும் சுகன்யாவும் நேற்று உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் விசாரணை நடத்திய இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்கலா, சுகன்யாவின் விருப்பத்தின் பேரில் அவரை இளங்கோவனுடன் அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'ஜிப்மர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊரடங்கில் அனுமதி உண்டு' - காவல் ஆணையர்