கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் - ஊராங்கன்னி கிராமம் உள்ளது. நேற்று (ஜன. 17) இரவு எஸ்.வி.பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஊராங்கன்னி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் முன் விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மோதல்:
இதனால், ஆத்திரமடைந்த ஊராங்கன்னி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எஸ்.வி.பாளையம் பகுதிக்குள் புகுந்து கடை, வீடுகளை அடித்து சூறையாடியது மட்டுமல்லாமல், அப்பகுதியில் சென்றவர்களை வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் இரு கிராமத்தினரும் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு:
அதனடிப்படையில், காவல் துறையினர் 35-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிந்து, 15 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
எச்சரிக்கை:
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என அப்பகுதி பொதுமக்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இருதரப்பினருக்கு இடையே மோதல் - இளைஞருக்கு அரிவாள் வெட்டு