கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உறவினர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று (ஜூலை 17) அப்போராட்டம் தீவிரமடைந்து கலவரமாக மாறியுள்ளது.
இந்த கலவரத்தில் உயிரிழந்த மாணவி படித்த சக்தி தனியார் மெட்ரிக் பள்ளியானது, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலரும் படுகாயமடைந்ததோடு அவர்கள் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தனியார் பள்ளி வளாகம் மற்றும் பள்ளிப்பேருந்து உள்ளிட்டவற்றை சேதப்படுத்துபவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு விதித்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல, சின்னசேலம் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நைனார்பாளையம் குறுவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள்