கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13அன்று சந்தேகத்திற்குரிய முறையில் பள்ளியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேதத்தை வாங்க மறுத்து உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி பல்வேறு போராட்டங்களைத்தொடர்ந்து நடத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்று அப்பள்ளியின் முன்பு போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு, பள்ளியின் உள்ளே நுழைந்து பள்ளிப்பேருந்துகளையும், பள்ளியில் உள்ள அனைத்து விதமான பொருட்களையும் தீ வைத்து சேதப்படுத்தினர்.
இதனைத்தடுக்க முயன்ற காவலர்களை கற்களால் தாக்கியும், பள்ளியின் உள்ளே நுழைந்து மாணவர்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்தும் கலவரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் முதற்கட்டமாக 20 சிறார்கள் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் 108 பேரை இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற (பொறுப்பு) நீதிபதி முகமது அலி முன்னிலையில் 128 பேரையும் ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளனர்.
மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் : சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!