திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்(19). இவரும், இவரது மனைவி ஜெயந்தியும், ஈரோடு மாவட்டம் குள்ளக்கவுண்டன்புதூர் அமரன் காட்டு தோட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் தோட்டத்தில் பன்றி மேய்ப்பதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
இருவரும் அங்கேயே தங்கி பன்றி மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சத்தியமூர்த்தியின் தாய் சம்பூர்ணத்தின் காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் கம்மல் காணாமல் போனது. இதை கணேஷூம், அவரது மனைவியும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் தங்களது சொந்த ஊரான திருப்பூருக்குச் சென்றுள்ளனர்.
ஒரு வாரமாக தம்பதியினர் திரும்பி வராததால் கணேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேறு வேலை இருப்பதாகக் கூறி சத்தியமூர்த்தி அழைத்துள்ளார். அதனை நம்பி, இன்று(மே.1) ஈரோடு வந்த கணேஷை, சத்தியமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, கணேஷின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கம்மலை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து, ஜெயந்தி மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கம்மலை கொடுத்து கொடுத்துவிட்டு கணவன் கணேஷனை அழைத்துக்கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் பலமாக தாக்கப்பட்டதால் நடக்க முடியாமல் திணறிய கணேஷ், அங்கேயே வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, கணேஷனின் உறவினர்கள் காவல் துறையினரிடம் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மலையம்பாளையம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றினர். தொடர்ந்து, மலையம்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து தொழிலாளியை தாக்கியவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:காட்டுக் கோழிகளை பிடிக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள்: அபராதம் விதித்த வனத்துறை!