ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு கடந்த 40 நாள்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமாப்பிள்ளையான ஜெகதீஷ் பெருந்துறையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் ஈரோடு வந்த ஜெகதீஷ், பணியை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது நசியனூரிலிருந்து ஈரோட்டிற்கு படு வேகமாக வந்த வேன் ஒன்று ஜெகதீஷ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர், வேனை அங்கேயே நிறுத்திவிட்டு பயத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் ஜெகதீஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய வேன் ஓட்டுநர், வேன் உரிமையாளர் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலை போடும் பணியில் ஈடுபட்ட வாகனத்தில் தீ விபத்து