ஈரோடு சூளை ஈ.பி.பி.நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் இனியன் (வயது நான்கு) எல்.கே.ஜி. படித்து வருகிறார். இனியன் இரண்டரை வயதில் இருந்தே யோகா பயிற்சியில் ஆர்வம் காட்டியதால், அவரது பெற்றோர் தங்களது வீட்டிற்கு அருகே இருக்கும் பவித்ரா யோகா பயிற்சி மையத்தில் அவரைக் கொண்டு சேர்த்து, யோகா பயிற்சி அளித்துள்ளனர்.
தொடர்ந்து, தனது இடைவிடாத பயிற்சிகளின் மூலம், கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் மூன்று வயதுடையோர் பிரிவில் இனியன் பங்கேற்று, பதக்கம், சான்றிதழ் பெற்றார். இந்நிலையில் தேசியப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற இனியனுக்கு, ஈரோடு ஜேசிஐ வார விழா சார்பில் ஜேசிஐ மண்டல தலைவர் சென்.மதிவாணன், இளம் சாதனையாளர் விருதினை வழங்கினார்.
இது குறித்து யோகா பயிற்சியாளர் பவித்ரா கூறுகையில், ”எங்களது யோகா பயிற்சி மையத்தில் பயின்ற சிறுவன் இனியன் ’இளம் சாதனையாளர் விருது’ பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இதுபோன்ற பல சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை சாதனையாளர்களாக ஆக்குவதே எங்களது இலக்கு” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்' - சூர்யா