ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊருக்குள் செல்லும் முக்கிய சாலையின் வழியே அரசு மதுபானக்கடை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென மதுபானக்கடைக்கு செல்லும் வழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கடத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதான சாலையிலிருந்து தங்களது கிராமத்திற்குள் வர இதுதான் முக்கிய சாலையாக உள்ளதாகவும் தற்போது கரோனா தொற்றால் பேருந்துகள் இல்லாத நிலையில் பெண்கள் வேலைக்கு சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்ப இரவு ஆகிறது.
இதனால் இரவில் வீடு திரும்பும் பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும், குடிமகன்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்தி அட்காசத்தில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதனை தொடர்ந்து கடத்தூர் காவல் துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்குமாறு அறிவுத்தியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.