ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருமாள் கோயில் புதூரைச் சேர்ந்தவர் மனோகரன். விவசாயியான இவர், வசந்தாமணி என்ற பெண்ணைத் திருமணம் முடித்துள்ளார். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகனும் ராதா, லலிதா என்ற மகள்களும் உள்ளனர்.
வசந்தாமணி அவர் வளர்த்து வரும் ஆடு, மாட்டை அதே பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்கால் விவசாய நிலங்களில் நாள்தோறும் மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 1) மாலை வசந்தாமணி வழக்கம் போல் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்பும் வசந்தாமணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வசந்தாமணியின் கணவர் மனோகரன், மகன் செந்தில்குமார் ஆகியோர் அவரைத் தேடினர்.
அப்போது, அங்குள்ள விவசாய நிலத்தில் வசந்தாமணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த கோபிசெட்டிபாளையம் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வசந்தாமணியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். வசந்தாமணியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கல்லையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி