ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் சின்னசாலட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி இளையம்மாள் (55). இவர் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். தனது ஆடுகளை தினமும் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்திற்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம்.
அதே போன்று இன்று (அக்.17) மதியம் இளையம்மாள் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றிருந்தார். அப்போது மாஸ்தி கொடிக்கால் என்ற பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வந்த காட்டு யானை, இளையம்மாளை துரத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த இளையம்மாள் வனப்பகுதியில் தப்பியோடியுள்ளார்.
அப்போது கால் தடுக்கி கிழே விழுந்த இளையம்மாளை யானை கொடூர தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த பகுதிக்கு வந்த கிராம மக்கள் யானையை காட்டுக்குள் விரட்டியடித்துவிட்டு இளையம்மாள் சடலத்தை மீட்டனர்.
பின்னர், சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், இளையம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வில்லன் டூ ஹீரோ.. மனம் திருந்தி சாதுவாக வாழ்ந்து மறைந்த மக்னா யானை மூர்த்தியின் கதை!
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடம்பூர் அருகே, இருட்டிபாளைம் பகுதியில் காட்டு யானை தாக்கி ராமன் என்பவர் பலியான நிலையில், இன்று மேலும் ஒருவர் யானை தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் கடம்பூர் மலைக் கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, அண்மைக் காலங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து குடியிருப்புகள், விளை நிலங்களைச் சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதால் யானைகளை அடர் வனப்பகுதிக்கு விரட்ட தமிழ்நாடு வனத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் மலைக் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.