ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கோடை காலம் என்பதால் குளம், குட்டைகள், ஏரிகள் வறண்டு போய் உள்ளன.
மேலும் அங்குள்ள செடி, கொடிகள், புற்கள் காய்ந்துள்ளன. இந்நிலையில், சத்தியமங்கலம் வனச்சரகம், அடர்ந்த காட்டுப்பகுதியான அத்தியூர், கம்பத்ராயன் கிரியில் இன்று (ஏப். 1) மாலை தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிகிறது. இந்த தீ வேகமாக பிற இடங்களில் பரவியது.
தீ வேகமாக பரவிவருவதாலும் இதில் மூலிகை மரங்கள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் சேதமடைவதைத் தடுப்பதற்கு வேட்டைத்தடுப்பு காவலர்கள் சுமார் 50 பேர் காட்டுப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். மேலும் இவர்கள் தீயில் வனவிலங்குகள் பாதிக்காதவாறும் தீ பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடு, மாடு மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் கிராமமக்கள் தீப்பற்ற வைத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்தில் தீ பற்ற வைப்பதோ அல்லது தீயை பரவ விடுவதோ வனக்குற்றமாக கருதப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.