ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றன.
சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து என்பவர் தனது விவசாய தோட்டத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ஜி 9 ரக வாழை பயிரிட்டுள்ளார். தற்போது வாழை மரங்களில் குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜன.23) கொத்தமங்கலம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஐந்து காட்டு யானைகள் காளிமுத்துவின் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்களை மிதித்ததில் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, விவசாயி காளிமுத்து தனது தோட்டத்திற்குள் சென்று பார்த்தபோது, வாழை மரங்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இப்பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால் யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க வனப்பகுதியை ஒட்டி அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குஜராத் மாநிலத்துக்கு அடித்த ஜாக்பாட் - வருகிறது டெஸ்லா இந்தியா!