ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம்.
இந்த யானைகள் தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சாலையில் நின்றபடி முகாமிட்டன. இதன் காரணமாக சாலையில் இருபுறமும் வாகனம் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இந்த தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனயைடுத்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. யானைகள் சாலையில் குறுக்கே நின்றதற்கு காரணம் கா்நாடக மாநிலத்திலிருந்து வரும் கரும்பு லாரிகளின் ஓட்டுநர்கள் சாலையில் கரும்புகளை வீசியெறிந்துள்ளனர். இந்த கரும்புகளை ருசி பார்த்த யானைகள் அங்கே நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் இப்பகுதியில் அடிக்கடி நடைபெறுவதால் சாலையில் வீசியெறியும் கரும்பு லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.