ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (62). இவரது மனைவி ஜோதிமணி(55). ரங்கராஜன் விசைத்தறி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் அவருக்கு 1 கோடி ரூபாய் கடன் பிரச்னை இருந்துள்ளது. இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் விபத்தில் சிக்கி காலில் காயமடைந்த ரங்கராஜன், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று(ஏப்.8) ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா(41) என்பவருடன் சேர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்னி வேனில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, பெருமாநல்லூர் அருகே அவர்களின் வாகனம் வந்த போது, வண்டியில் இருந்து புகை வந்ததாக கூறி இறங்கிய ஜோதிமணியும், ராஜாவும் ரங்கராஜனை மீட்பதற்குள், கார் முழுமையாக தீ பிடித்து எரிந்து விட்டதாகவும், அதில் ரங்கராஜன் உடல் கருகி உயிரிழந்து விட்டதாகவும் இருவரும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஜோதிமணி, ராஜாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது,அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்தன.
காவல்துறையினரின் தொடர் விசாரணையில், ரங்கராஜனுக்கு ரூ.1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளதும், அவர் ரூ.3 கோடிக்கு விபத்து காப்பீடு எடுத்திருந்ததும், அதற்கான நாமினியாக ஜோதிமணியை நியமித்திருந்ததும் தெரியவந்தது. இவ்வளவு கடன் உள்ள நிலையில் தன்னை கொன்று விடுங்கள் என ரங்கராஜன் கூறியதால் கடன் பிரச்னையில் இருந்து மீளவும், 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு தொகையை பெறவும் ஜோதிமணி தனது கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து, கணவரை எரித்துக் கொன்ற ஜோதிமணியையும், அவருக்கு உதவியாக செயல்பட்ட உறவினர் ராஜா என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பாளர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை- ஹர்ஷ் வர்தன்