மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், ஈரோடு புத்தகத் திருவிழா வஉசி பூங்கா மைதானத்தில் ஆக. 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் சென்னை எஸ்.பி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதி யார்? என்ற இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் பங்கேற்றார்.
அப்போது பேசிய சிவக்குமார் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை கூறினார். இதில், 'பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பிறந்தார். கணிதத்திலும், ஆங்கிலத்திலும் பெரிய மேதையாக வர வேண்டும் என்று அவருடைய தந்தை ஆசைப்பட்டார். ஆனால் அவர் தனது நண்பரான சோமசுந்தர பாரதியை கூட்டிக்கொண்டு கோயில் மண்டபங்களில் ஒழிந்து, கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் படித்தார். 11ஆவது வயதில் பாரதி என்று போற்றப்பட்டார்.
பசியில் வாடிய நீலகண்ட பிரம்மச்சாரி நிலையை பார்த்த பாரதி, தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாட்டை எழுதினார். 1912இல் பகவத்கீதையை மொழி பெயர்த்தார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை எழுதினார். பாரதி தாலாட்டை தவிர அனைத்தும் எழுதி உள்ளார். பாரத நாடு, பாரத தாய், ரோமாபுரியுடன் வாணிபம் செய்தது, தேசிய ஒருமைப்பாடு, நதி நீர் திட்டம், சேது சமுத்திர திட்டம், அந்நிய ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றை தனது பாட்டின் மூலம் பாரதி தெளிவுபடுத்தியுள்ளார்' என்றும் தெரிவித்தார்.