தென்னந்தியாவில் மிகப்பெரிய மண் அணையான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, இந்த ஆண்டு அணை முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டியது.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகு பாசனப்பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், நெல் பயிரிடுவதற்காக விநாடிக்கு 2200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து பாசனப்பகுதி விவசாயிகள் நெல் நடவு செய்தனர். 123 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்றுடன் முடிவடைந்தது.
இருப்பினும், பாசனப்பகுதிகளில் நெற்பயிருக்குத் தண்ணீர் தேவை உள்ளதால், நீர் திறப்பை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பு இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.87 அடியாகவும், நீர் இருப்பு 32.6 டிஎம்சியாகவும் உள்ளது.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 463 கனஅடியாகவும், அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2200 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க:
70 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவிலான காசநோய் தாக்கம் குறித்த ஆய்வு!