ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் அணையிலிருந்து பாசனத்திற்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு, மாயாற்றில் நேற்று இரவு முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீரின் வரத்து மூன்றாயிரத்து 362 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து ஆறாயிரத்து 429 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 96.51 அடியாகவும் நீர்இருப்பு 26 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமான் கருத்திற்கு திமுக வாய் திறக்காதது ஏன்? கராத்தே தியாகராஜன் கேள்வி