ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி உயரம் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதாலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும் அணைக்கு நீர்வரத்து 100-150 ஆக குறைந்தது. இந்நிலையில், பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதாலும், பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதாலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று அணைக்கு 459 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 675 கன அடியாக அதிகரித்தது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 52.42 அடியாகவும், நீர் இருப்பு 5 டி.எம்.சி.யாகவும் இருந்தது. குடிநீர் தேவைக்காக, பவானி ஆற்றில் வினாடிக்கு, 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.