ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானி சாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி கொள்ளளவும் கொண்டது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த மூன்றாம் தேதி 86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று (ஆக.13) 101.50 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலிலிருந்து நெல், மஞ்சள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கைவிடுத்தனர்.
இதனை ஏற்று நாளை (ஆகஸ்ட்14) 120 நாள்களுக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதன் மூலம் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நாளை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் வாய்க்காலில் தண்ணீர் திறப்புக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இன்று காலை எட்டு மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டஉயரம் 101.50 அடியாகவும், நீர் வரத்து ஐந்தாயிரத்து, 665 கனஅடியாகவும், நீர் இருப்பு 29.96 டி.எம்.சி யாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலில் ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.