ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் காவல் துறை-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி, சத்தியமங்கலம் துணை மண்டலத்திற்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர் மலைப்பகுதியில் காவல் துறை சார்பில் பொதுமக்கள் கலந்துகொண்ட கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிகளை சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தொடங்கிவைத்தார். தாளவாடியில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. இதில் சன்லைட் அணி முதல் பரிசையும், கும்டாபுரம் அணி இரண்டாம் பரிசையும், அம்பேத்கார் அணி மூன்றாம் பரிசையும் வென்றன.
அதேபோல், ஆசனூரில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்றன. அதில், ஆசனூர் தீயணைப்புப் பிரிவு அணி முதல் பரிசையும், பங்களாதொட்டி அணி இரண்டாம் பரிசையும், ஆசனூர் காவல் துறை அணி மூன்றாம் பரிசையும் வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டன.