ஈரோடு : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர், குண்டுக்கல் தோட்டம் பகுதியில் கணேசன் என்பவரின் தோட்டம் உள்ளது. இங்குள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி அளவு தண்ணீர் இருக்கிறது. இந்த நிலையில் தோட்டத்தில் சுற்றித்திரிந்த கண்ணாடி விரியன் பாம்பு அந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி பாம்பை உயிருடன் மீட்டு, அந்தியூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பாம்பு வனத்துறையினரால் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் விவசாய விளை நிலங்களுக்குள் இதேபோல் அதிக அளவில் பாம்புகள் சுற்றி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.