ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் எலந்தகாடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(60) விவசாயி. இவரது தந்தை அர்த்தநாரிக்கவுண்டர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், வாரிசு சான்று வழங்கக் கோரி சிறுவலூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியிடம் ஓராண்டுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார்.
வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி முதலில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றார். அதைத்தொடர்ந்து, மேலும் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என முத்துசாமியை நிர்பத்தப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, முத்துசாமி மீண்டும் லங்சம் தருவதாக ஒப்புக்கொண்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு மக்கள் இயக்கத்தில் புகார் அளித்தார்.
அங்கு லஞ்ச ஒழிப்பு அலுவலர்களின் வழிகாட்டுதலின் படி, கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமிக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு, இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், முத்துசாமியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினர்.
அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியிடம் முத்துசாமி வழங்கிய போது, மறைந்திருந்த ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் திவ்யா, காவல் ஆய்வாளர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.