ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் கரும்பு, மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை சேதம் செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், கடம்பூர் மலைப்பகுதி குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் சாகுபடி செய்த பயிர்களை நாசம் செய்துள்ளது. இதனால் அந்த விவசாயி, சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு பெற சான்றிதழ் கேட்டு, சத்தியமங்கலம் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு பெற கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற்று, விவசாயத் துறையின் சான்றிதழை இணைக்க வேண்டும்.
பயிர் சேத சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த விவசாயிடம், வேளாண்மை துறை உதவி இயக்குநர் வேலுச்சாமி என்பவர் சான்றிதழ் வழங்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பேசும் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் வேலுச்சாமி, ஆபீஸ் செலவுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் எனவும், இழப்பீட்டுத் தொகை 22 ஆயிரம் என்பதை 24 ஆயிரமாக போட்டுத் தருகிறேன், அதற்கு நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
அதற்கு விவசாயி, இந்த விசயம் தனக்கு தெரியாது என்றும், தான் கொண்டு வந்த 500 ரூபாயிலிருந்து பெட்ரோல் செலவு போக மீதம் 400 ரூபாய்தான் இருக்கிறது என்றும் கூறுகிறார். அதற்கும் சளைக்காத அதிகாரி, இங்கு யாரிடமாவது போய் பணம் ஏற்பாடு செய்து கொண்டு வாருங்கள் என கூறுகிறார். அதற்கு விவசாயி, இங்கு யாரையும் எனக்குத் தெரியாது சார் எனவும், விடிய விடிய தூங்காமல் யானைக்கு காவல் இருந்தும் யானைகள் பயிர்களை சேதம் செய்கிறது என்று கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காட்டு யானைகளால் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு பெற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த விவசாயிடம், வேளாண்மைத் துறை அதிகாரி 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கடம்பூர் மலைப்பகுதி சாலையில் அதிகரிக்கும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தல்!