ஈரோடு: சென்னிமலை திருமலை நகரைச் சேர்ந்தவர், வேலுச்சாமி. இவரிடம் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னிமலையைச் சேர்ந்த வேலுமணி என்பவர், விஜிபிஇன்ஜினியர்ஸ் பில்டர்ஸ் என்ற பெயரில் வீடு கட்டி தரும் நிறுவனத்தை தான் நடத்தி வருவதாகவும், குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாகவும், இதற்கு சிறிய தொகை கொடுத்தால் போதும் என்றும் மீதத் தொகைக்கு வங்கியில் கடனுதவி பெறலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய வேலுச்சாமி இரு இடங்களில் வீடு கட்ட ஒப்பந்தம் போட்டு உள்ளனர். இதற்காக முன் பணமாக 3 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்.
முதற்கட்டமாக வேலை தொடங்கி சில மாதங்களில் கூடுதலாக பணம் தேவை எனக் கூறி, இது வரை ரூ.13 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வீடு கட்டி தராமல் இருந்து வந்துள்ளார். மேலும், வங்கிகளில் கடனுதவி பெற்றுத் தராமல் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டின் வேலைகளையும் பாதியிலேயே விட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வேலுச்சாமி கேட்டபோது, தனக்கு முழுவதும் நஷ்டம் ஆகி விட்டதாக கூறியது மட்டுமல்லாமல் அநாகரிகமாக வார்த்தைகளால் பேசியும் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதே போன்று வேலுமணி அப்பகுதியைச் சேர்ந்த பலரிடமும் குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக கூறி சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பெற்று உள்ளார். இதனால், வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் இன்று (ஜூலை 19) கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, சென்னிமலையில் வசிக்கும் தங்களுக்கு திருமலை நகரில் ஆதி திராவிடர் நலத்துறையில் இருந்து வீடு தந்ததாகவும், இதற்கான கட்டுமானப் பணிகளின்போது வந்து வீடு கட்டுவதற்கு கடன் பெற்று தருவதாக கூறிக்கொண்டு சென்னிமலை விஜிபி இன்ஜினியர் வேலுமணி என்பவர் வந்ததாக கூறினார்.
தனது வீடு உள்பட தனது தாயாரின் வீடு ஆகியவற்றையும் ரூ.11 லட்சத்துக்கு கட்டித் தருவதாக அவர் பேசியதாகவும், இதற்காக அடிக்கடி பணம் பெற்றுக் கொண்ட அவர், தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி விட்டு சென்றதாக வேலுச்சாமி கூறினார்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் வேலுமணி கேட்ட ரூ.13 லட்சம் பணத்தையும் அவருக்கு அளித்ததாகவும், பின்னர் நஷ்டம் ஆகிவிட்டதாகக் கூறி இனிமேல் வேலை செய்யமுடியாது என்று கூறியதாக வேலுமணி கைவிரித்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து யாரிடம் சென்று முறையிட்டாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி மிரட்டல் விடுப்பதாகவும், 'ஓலைக் குடிசை வீட்டில் வாழ்ந்த உங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தந்ததால் ரொம்ப திமிரா?' என்று பேசுவதாகவும் வேலுச்சாமி கூறினார்.
இதனிடையே, தன்னிடம் இருந்து கூடுதலாக ரூ.5 லட்சத்தை பெற்றுள்ளதாகவும், வீட்டு வேலைகளை பாதியில் நிறுத்தியுள்ளதாகவும் கூறினார். இதற்காக பல இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளையும், வீட்டு பத்திரத்தையும் அடமானம் வைத்தும் பணம் பெற்று அவரிடம் கொடுத்த நிலையில் அவரால், ஏமாற்றப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார்.
ஆகவே, பாதியில் நிறுத்தப்பட்ட தனது வீட்டு வேலைகளை முழுதாக கட்டி முடிக்கவும், இழந்த பணத்தை மீட்டுத் தருமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக வேலுச்சாமி தெரிவித்துள்ளார். இதேபோல, சென்னிமலையில் 15 பேரிடம் பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளதாகவும், காவல் துறை இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய தமிழ்ச்செல்வி கூறுகையில், விஜிபி இன்ஜினியர் வேலுமணி என்பவர் வங்கியில் கடன் ஏற்பாடு செய்து வீடு கட்டி தருவதாக கூறி, அரைகுறையான கட்டுமானப் பணிகளுடன் ரூ.3 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக கூறினார்.
வீடு கட்டித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் உள்ள வேலுமணி மீது சென்னிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரை பெற்றுக் கொள்ளாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இது குறித்து புகாரளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கூலித் தொழில் பார்த்துக் கொண்டு வீடு கட்டும் பணியை தொடங்கிய தங்களை, இது குறித்து கேள்வி கேட்டதற்கு இன்ஜினியர் வேலுமணி தவறாக பேசுவதோடு, தாக்குதல் நடத்த வருதாகவும் கூறினார். ஆகவே, இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: CCTV - செயினை பறிக்க முயன்ற இளைஞர் - சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ்..!