ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் - கல்பனா தம்பதியின் ஒன்றரை வயது மகள் கிருத்திகாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சளிக்கான சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். குணமடையாததால் சந்தேகமடைந்த அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் குழந்தைக்கு வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய குடல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் இடம் மாறி மார்புப் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெற்றோரிடம் குழந்தைக்குள்ள உடல் உபாதையைக் கூறி டயாபர்மேடிக் ஹெர்னியா ( Diaphragmatic Hernia) எனப்படும் உடல் உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தும் அறுவைச் சிகிச்சையை உடனடியாக செய்து குழந்தையைக் காப்பாற்றிட வேண்டும் என்று கூறினர். இதையடுத்து ரஞ்சித்குமார் - கல்பனா தம்பதியினர், குழந்தையின் உடல் நலன் கருதி அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டனர்.
பின்னர் மருத்துவர்கள் குழுவினர், மயக்க மருந்தியல் மருத்துவர் உதவியுடன் அறுவைச் சிகிச்சையை நேற்று மேற்கொண்டனர். அறுவைச் சிகிச்சை முடிவுற்று குழந்தை நலமுடன் இருப்பதால் பெற்றோர் தனது குழந்தையுடன் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர், மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கோமதி, "ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வரலாற்றில் முதன் முறையாக மிக வயது குறைந்த குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு குழந்தை உயிரைக் காப்பாற்றி வெற்றிகரமாக சிகிச்சையை அரசு மருத்துவர்கள் முடித்துள்ளனர். குழந்தை தற்போது பூரண நலமுடன் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் ரூ. 1 லட்சம் செலவாகியிருக்கலாம்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாம்பு கடி; உயிர் பிழைக்க வைத்த ராணுவ மருத்துவமனை