ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதி, கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. இதையறிந்த மதுப்பிரியர்கள், கர்நாடக மாநிலத்திற்குச் சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவிலிருந்து அதிகளவில் மதுபான பாட்டில்களை வாங்கிய இளைஞர்கள் சிலர், அதனை கடம்பூர் மலைப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, கடம்பூர் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், அப்பகுதியில் அதிரடி சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதி வழியாக இரண்டு பைக்கில் வந்த இளைஞர்களை, மடக்கி சோதனை செய்தனர். அதில், நூற்றுக்கணக்கான கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (26), குப்புசாமி (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.