ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வழியாக தமிழ்நாட்டிற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த பிக்கப் வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 68 சாக்கு மூட்டைகளில் இரண்டு டன் எடையுள்ள கணேஷ் பாக்கு, ஸ்வாகா கோல்டு புகையிலை, விமல் பான்மசாலா, விமல் புகையிலை உள்ளிட்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் சஜீத் (31). என்பவரை விசாரித்தபோது கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து கோவை மாவட்டம் அன்னூருக்கு குட்கா கடத்தியது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
இதையடுத்து வேனை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுனர் சஜீர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பரத் மற்றும் வாகன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சிசிடிவி: பட்டாக்கத்தியால் சொமாட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்து சென்ற இளைஞர்...