ஈரோடு அருகேயுள்ள சோலார் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு அறிமுகமான அந்தியூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக உதவியாளர் பதவிக்கு முயற்சித்துள்ளார்.
இதற்கு திருவண்ணாமலை மாவட்டம் திமிரியைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகி தெய்வசிகாமணி என்பவர் உதவுவார் என்று அவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து 7 லட்சம் ரூபாய் தொகை பேசி, கடந்த சில நாள்களுக்கு முன் சந்தோஷிற்கு வாட்ஸ்அப் மூலம் வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக உதவியாளர் பணிக்கான உத்தரவை அனுப்பியுள்ளனர்.
இதில் மகிழ்ச்சியடைந்த சந்தோஷ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியிடம் காட்டி தனக்குப் பணி கிடைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட அவர் இது போலியான உத்தரவென்று கூறி இது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கக் கூறவே, சந்தோஷும் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் கடந்த சில நாள்களுக்கு முன் அந்தியூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தற்போது திருவண்ணாமலையில் பணியாற்றிவரும் சரவணன் என்பவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் கொடுத்த தகவலின்பேரில் திருவண்ணாமலை மாவட்டம் திமிரியைச் சேர்ந்த தெய்வசிகாமணியை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று (செப். 22) கைதுசெய்தனர்.
மேலும், அவரிடமிருந்து போலியான உத்தரவுகள், அரசு முத்திரைகள், முத்திரைத்தாள்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், இவர்களால் யாரேனும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பணமோசடி எதுவும் நடந்திடவில்லையென்றாலும் அரசின் பெயரில் போலியான உத்தரவுகளை வழங்கிய குற்றத்திற்காகப் பள்ளி நிர்வாகி தெய்வசிகாமணி கைதுசெய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மேலும் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணி வாங்கித் தருவதாக யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போலி கால்சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி!