ஈரோடு: சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புஞ்சை புளியம்பட்டி அருகே புதுரோடு பகுதியில் ஒரு பேக்கரி செயல்பட்டு வருகிறது. இன்று (ஏப்.19) அந்த பேக்கரிக்கு வந்த இருவர் தேநீர் அருந்திவிட்டு தின்பண்ட வகைகளை வாங்கியபோது பேக்கரியில் தேநீர் மாஸ்டரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தேநீரையும், தின்பண்ட வகைகளுக்கும் பணத்தை பேக்கரி ஊழியர்கள் கேட்க, பணம் தர மறுத்துள்ளனர்.
கடன் தருவதில்லை பணம் தருமாறு ஊழியர்கள் தொடர்ந்து கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும் பேக்கரி ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
இது குறித்து பேக்கரி மாஸ்டர் சக்திவேல் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ், வாலிபாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.