ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து பச்சை நிற மண்டலமாக மாறிய நிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சென்னிமலையைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது உறவினரைப் பார்க்க செங்கல்பட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், அப்பெண்ணுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அப்பெண் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்குப் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.