ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது திம்பம் மலைப்பாதை. இந்த பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இம்மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்வதற்காக பால் டேங்கர் லாரி, திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி 26ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது டேங்கர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்திருந்து தமிழ்நாடு நோக்கி சென்ற, மற்றொரு டேங்கர் லாரியும் சரக்கு லாரி மீது மோதியது. ஒரே நேரத்தில் 3 லாரிகள் மோதி சாலையில் நின்றதால், திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் லாரி ஓட்டுநர்களுக்கிடைய விபத்து தொடர்பாக கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
இதனால், மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. தகவலறிந்த ஆசனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தை சீர்படுத்தினர். இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கிடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : குட்டிகளுடன் கம்பீரமாக நடந்து வந்த புலி - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்