ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி ஜானகி. இந்தத் தம்பதிக்கு திவ்யா ஸ்ரீ (6), தீபனா ஸ்ரீ (6) என இரட்டை மகள்கள் உள்ளனர்.
முருகேசன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து ஜானகி இரு குழந்தைகளுடன் தனது தாயாரான வசந்தாவுடன் வாழ்ந்துவருகிறார். திவ்யா ஸ்ரீயும் தீபனா ஸ்ரீயும் பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், தங்கள் வீட்டில் இருந்த மாட்டுத் தொழுவத்தில் வசந்தாவும் ஜானகியும் கால்நடைகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்தனர். மாட்டுத் தொழுவத்தின் முன்புறம் குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் எட்டு அடி உயரமுள்ள காம்பவுண்ட் சுவர் இரும்புக் கதவுடன் இடிந்து விழுந்தது. இதில் காம்பவுண்ட் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த திவ்யா ஸ்ரீ, தீபனா ஸ்ரீ இருவரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலத்த காயமடைந்தனர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஜானகியும், வசந்தாவும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குழந்தைகளை மீட்டனர். பின் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பெங்களூருவில் மற்றுமொரு மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது